| நாலடியார் பாடல் பாடுகிறார், திருக்குறள் தெளிவுரை சொல்கி்றார், மரபு கவிதையில் ஆரம்பித்து நவீன இலக்கியம் வரை பேசுகிறார். கமலை சகலகலா வல்லவர் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
'தசாவதாரம்' பரபரப்பினிடையே கிடைத்த கேப்பில் ஓய்வு எடு்க்காமல் தனது இலக்கிய நண்பருக்காக பாராட்டு விழா ஒன்றை நடத்தியுள்ளார் கமல்ஹாசன். 'மருத நாயகம்' படத்திற்காக கமலுடன் இணைந்து பணியாற்றுபவர் கவிஞர் புவியரசு. வானம்பாடி காலத்திலிருந்தே பல்வேறு இலக்கிய சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரது மொழி பெயர்ப்பு நூலான 'புரட்சிக்காரன்' நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. ஆனால் அந்த விருதை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் இருந்தவருக்கு பாராட்டு விழா ஒன்றை எற்பாடு செய்திருந்தது கமல்ஹாசன் நற்பணி இயக்கம்.
சென்னை மயிலாப்பூரில் எம்.சி.டி.எம். மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் கமலின் கைகளால் சாகித்ய அகாடமி விருதை புவியரசு பெற்று கொண்டு பேசினார்.
"சமிபத்தில் நான் கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்ட.ஒரு நாள் கமல் என்னிடம் நான்கு கவிதைகளை எழுதி போனில் வாசித்துக்காட்டினார். அவர் கவிதையை கேட்ட நொடியிலிருந்து எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த எழுத்தார்வம் மீண்டும் துளிர்விட்டு எழுத ஆரம்பித்தேன். இலக்கியத்திலும் திறமையை வளர்த்துக் கொண்டவர் கமல். அவருடைய திறமையை தமிழ்நாடு இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கமல், "ரொம்ப நாளாகவே கவிதை தொகுப்பு போட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இன்னும் சில மாதங்களில் அதனை நிறைவேற்றுவேன். கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தியது போல சிறந்த இலக்கியவாதிகளுக்கு தொடர்ந்து விழா எடுக்க ஏற்பாடு செய்வோம். எங்கள் நற்பணி மன்றத்தின் இதழான 'மய்யம்' மறுபடியும் வரும். 'மருதநாயகம்' படத்திற்கான முயற்சிகள் தொடரும்" என்றார்.
முன்னதாக கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாடமி விருதை கமல் வழங்கினார். இவ்விழாவிற்கு கோவை வானொலி நிலைய இயக்குனர் ஜெ. கமலநாதன் தலைமை தாங்க, திலகவதி I P S, கு. ஞானசம்பந்தன், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
|